அனைவரும் ஏக இறைவனையே பின்பற்ற வேண்டும் – மனுஜோதி ஆஸ்ரமத்தின் தலைவர் பால் உப்பாஸ் லாறி

திருநெல்வேலி முக்கூடலில் அமைந்துள்ள மனுஜோதி ஆஸ்ரமத்தில் ஶ்ரீலஹரி கிருஷ்ணாவின் 55 வது கல்கி ஜெயந்தி விழாவும் சர்வசமய மாநாடும் நடைபெற்றது.

மாநாடு விழாவில் மனுஜோதி ஆசிரம தலைவர் திரு. பால் உப்பாஸ் லாறி அவர்கள் பேசும் போது: “இந்த கல்கி ஜெயந்தி விழாவானது 1969-ம் ஆண்டு மனிதன் முதன் முதலில் சந்திரனின் காலடி வைத்த அன்று ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் அமெரிக்காவில் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அங்கே குழுமி இருந்த மக்கள் அவர் சாதாரண மனிதர் அல்ல. தெய்வாம்சம் பெற்றவர் என்பதை அறிந்து கொண்டார்கள். ஜூலை 21-ம் நாள் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் மகா அவதாரமாக தம்மை உலகிற்கு வெளிப்படுத்திக் காண்பித்தார். அதை நினைவு கூர்ந்து கல்கி ஜெயந்தி விழாவாக கொண்டாடுகிறோம்.

கடவுள் ஒருவரே என்ற கொள்கையை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் அனைத்து மதத்தினரும் ஏக இறைவனையே பின்பற்ற வேண்டும் என்பதே இந்த சர்வ சமய மாநாடு மற்றும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நோக்கமாகும். மதத்தின் பெயரால் பிரிவினைகள் வேண்டாம் எனவும் பைபிள், குர்ஆன், பகவத் கீதை, அகில திருட்டு, பவிஷ்ய புராணம் எல்லா வேதங்களையும் மற்றும் எல்லா தீர்க்கதரிசிகளின் புத்தகங்களையும் படிக்குமாறு ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் எங்களை கேட்டுக் கொண்டார்கள். அதில் உள்ள மறைக்கப்பட்ட ரகசியங்களை எடுத்து விளக்கி கூறினார்கள். அதைப் புத்தகமாக வெளியிடுகின்றோம். இறைவனே அவருடைய அன்பான கரங்களால் நம்மை வடிவமைக்க கூடியவனாக இருக்கின்றார். மண் சரீரத்தை உடைய மனிதன் எப்படி இறைவனிடம் ஒன்றுபட வேண்டும் என்பதை விளக்குவதற்காக “The Skill of His Loving Hands”  மற்றும் “புதிய தேவ கீதை புத்தகம்” என்ற இரண்டு புத்தகங்களை வெளியிடுகிறோம். கடவுள் ஒருவரே நாம் எல்லோரும் அவருடைய சிருஷ்டிகள் என்பதைப் பற்றியே வேதங்கள் போதிக்கிறது. நாம் அவரை பல நாமங்களால் பல்வேறு மொழிகளில் அழைக்கிறோம். சமஸ்கிருத மொழியில் நாராயணா என்றும், அரபு மொழியில் அல்லாஹ் என்றும், எபிரெய மொழியில் இயேசு அல்லது யெகோவா என்றும் அழைக்கிறோம். ஆனால் அவைகளெல்லாம் ஒரே கடவுளைத்தான் குறிக்கிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம். இறைவனைப் பற்றி தெய்வீக ஞானத்தை மக்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையை எங்களுக்கு என்னுடைய தந்தையார் திரு. தேவாசீர் லாறி அவர்கள் விதைத்தார்கள். இறைவனைப் பற்றி அறிகின்ற அறிவினை மக்களுக்கு அறிவுதானமாக செய்யுமாறு பயிற்றுவித்தார்கள். நாங்கள் அதைத் தொடர்ந்து செய்து வருகின்றோம். கோவில்களிலே அன்னதானம் செய்கிறார்கள். நாங்கள் அறிவுதானம் செய்து வருகின்றோம். மனுகுலத்திற்கு ஜோதியாகிய ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளை மனுஜோதி என்ற புத்தகமாக வெளியிட்டு வருகின்றோம். அதன்மூலம் மனுஜோதி ஆசிரமத்துடன் தொடர்புள்ள அநேகர் இருக்கின்றார்கள்”. என்று உரையாற்றினார். இம்மாநாட்டிற்கு மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கி முதல் நூலை வெளியிட, நெல்லை ஷிபா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர். முகமது அராபத் பெற்றுக்கொண்டார். இரண்டாம் நூலை மயன் குரூப் ஆப் கம்பெனியின் இயக்குநர் ரமேஷ் ராஜா வெளியிட, சென்னை வழக்கறிஞர் கருணாநிதி

  • பெற்றுக் கொண்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை தேவாசீர் லாறியின் குமாரர்களான பால் உப்பாஸ் லாறி, லியோ பால் லாறி செய்திருந்தார்கள்.