தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் அடிமையாக இருக்காது என்று சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள அன்பகத்தில் திமுக மாநில மாணவரணி, மாவட்ட,மாநகர, மாநில அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது. தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது ஒரு பொற்கால ஆட்சியாகும். தமிழ்நாட்டில் விடியலுக்கான ஆட்சியை அமைத்து 117 நாட்களுக்குள் இந்த அரசை அனைவரும் பாராட்டி வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து ஆட்சியை ஒப்படைத்த மக்களுக்கு தமிழக அரசின் செயல்பாடுகள் கூடுதல் நம்பிக்கை, திருப்தியை எற்படுத்தி இருக்கிறது. ஒன்றிய அரசிடம் திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதற்காக ஒன்றிய அரசிடம் அடிமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று நமக்கு நமது தலைவர் சொல்லித்தரவில்லை. இதைத்தான் சட்டமன்றத்தில் எனது கன்னி பேச்சிலும் கூறி இருக்கிறேன். நமது மாநில உரிமைகள் பறிக்கப்படும்போது அதற்காக ஒன்றிய அரசிடம் நாம் கண்டிப்பாக குரல் கொடுக்க வேண்டும். வருகிற 20-ம் தேதி ஒன்றிய அரசை எதிர்த்து வீடுகளின் முன்பு போராட்டம் நடத்தும்படி திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த போராட்டத்தை நாம் கண்டிப்பாக வெற்றி பெற செய்ய வேண்டும். ஒன்றிய அரசுக்கு எதிராக நமது எதிர்ப்பை வலுவாக பதிவு செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.