அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து ரூ. 57 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து இந்தோனேசியா மற்றும் ஜப்பானில் நடைபெறவிருக்கும் பாரா பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்க உள்ள பாரா விளையாட்டு வீரர் ஜெகதீஷ் டில்லிக்கு செலவீன தொகையாக ரூ. 2 இலட்சிற்கான காசோலையும், தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ள 6 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு செலவீன தொகையாக ரூ. 15.45 லட்சத்திற்கான காசோலையினையும், 12 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 9.55 லட்சம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார். மேலும், சென்னையின் எஃப்சி ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Chennaiyin FC Sports Private Limited) நிறுவனத்தின் விளையாட்டு வீரர்கள் 2024 முதல் 2026 வரை நடைபெற உள்ள சென்னையின் எஃப்சி கால்பந்து அணி பயிற்சி மேற்கொள்ளவும், போட்டிகள் நடத்தவும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுபாட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் உள்ள “பி” மைதானத்தை மேம்படுத்திட ரூ. 30 இலட்சம் நிதியினை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் சென்னையின் எஃப்சி ஸ்போர்ட்ஸ் பிரைவேட் நிறுவனத்திடம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., சென்னையின் எஃப்சி ஸ்போர்ட்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.