பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-120, திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் பகுதியில் மூலதன நிதியின் கீழ், ரூ.26.42 இலட்சம் மதிப்பில் புனரமைத்து மேம்படுத்தப்பட்ட மீன் அங்காடியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (20.09.2024) பயன்பாட்டிற்குத் திறந்து வைத்துப் பார்வையிட்டார். நடுக்குப்பம் மீன் அங்காடியானது 218.10 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு இரும்பு படிக்கட்டுகள் மற்றும் கழிவுநீர் செல்வதற்கான வசதிகள் புதிதாக அமைக்கப்பட்டு, தண்ணீர் வசதி, மின்வசதி மற்றும் கழிப்பறை வசதி மேம்பாடு உள்ளிட்ட புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், நடுக்குப்பம் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், சைல்ட்லைஃப் (Child Life NGO) தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.41 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கைப்பந்து விளையாட்டு மைதானம் மற்றும் கேரம், டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து, உடற்பயிற்சிக் கூடம் மற்றும் சதுரங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய உள்விளையாட்டு அரங்கத்தினை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
பின்னர், அப்பகுதியில் உள்ள குழந்தைகள் மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி கலந்துரையாடினார்.முன்னதாக, நடுக்குப்பம் பகுதியில் உள்ள சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, சைல்ட்லைஃப் (Child Life NGO) தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சாந்தி ராஜசேகரன், இணை ஆணையாளர் (கல்வி) முனைவர் ஜெ. விஜயா ராணி, இ.ஆ.ப., மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., மண்டலக்குழுத் தலைவர் எஸ்.மதன்மோகன், மாமன்ற ஆளுங்கட்சித் துணைத் தலைவர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ் (எ) தனசேகரன், மாமன்ற உறுப்பினர் ரா. மங்கை ராஜ்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.