இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின, பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-58க்குட்பட்ட கண்ணப்பர் திடலில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வீடற்றோருக்கான காப்பகத்தில் வசிக்கும் 114 குடும்பங்களுக்கு மூலக்கொத்தளம் திட்டப் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் ஒதுக்கீடு ஆணைகளை (23.09.2024) வழங்கினார். அமைச்சர் உதயநிதி பேசும்போது தெரிவித்ததாவது :
எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் 114 குடும்பங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடுகளை ஒதுக்கீடு செய்வதற்கான ஆணைகளை வழங்குகின்ற இந்தச் சிறப்பான நிகழ்ச்சியில் பங்கேற்று உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு உங்களின் 22 வருடக் கனவினை இன்று நிறைவேற்றி காட்டியிருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை என்பது அடிப்படைத் தேவைகள். அதிலும், இருக்க இடம் என்பது மிகவும் முக்கியமான தேவை. அந்தத் தேவையை இந்த அரசு இன்று நிறைவேற்றி கொடுத்திருக்கிறது. அதனால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள மகிழ்ச்சியை ஒவ்வொருவருடைய முகத்திலும், உங்களுடைய சிரிப்பின் மூலம் நான் உணர்கின்றேன். மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப் பகுதியில் உங்களுக்காக 114 வீடுகள் வழங்கப்பட உள்ளன. உங்கள் அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்று உறுதியோடு பணிகள் மேற்கொண்ட மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களுக்கும், அதனை நிறைவேற்றி தந்த மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களுக்கும், தங்களுடைய தொகுதி மக்களுக்கு வீடு கிடைக்க வேண்டும் என்ற உங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற உறுதுணையாக இருந்த எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. இ. பரந்தாமன் அவர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சொல்வதை செய்கின்றவர், செய்வதை மட்டுமே சொல்கின்ற தலைவர். 2021ஆம் ஆண்டு தேர்தலின்போது, கண்ணப்பர்திடலில் உள்ள வீடற்றோருக்கான காப்பகத்தில் வசிப்பவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள். வாக்குறுதி தந்தது மட்டுமல்லாமல், சென்ற ஆண்டு மழைக்காலத்தின் போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை அண்ணன் சேகர்பாபு அவர்கள் இந்தப் பகுதிக்கு அழைத்து வந்தார். அப்பொழுது நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உங்களுக்கு ஒரு வாக்கு கொடுத்திருந்தார்கள். அடுத்த மழைக்காலத்திற்குள்ளாக உங்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். சொன்னபடியே நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உங்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளார்கள். உங்களுக்கு வாக்குறுதி தந்தபடி பல்வேறு களஆய்வுகள், உயர்தர ஆய்வுகள், சட்டமன்ற உரைகள் என்று ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செய்து கொடுத்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் வசிக்கிற ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு இருக்க வேண்டும். குடிசைகளே இருக்கக் கூடாது என்று நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இந்தியாவிலேயே முதல்முறையாக குடிசைமாற்று வாரியத்தை தொடங்கினார்கள். நம்முடைய முதலமைச்சர் அவர்களால், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று உயர்த்தப்பட்டு வீடற்ற மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது. அந்த வரிசையில் இன்று 114 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. இனி நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.
இவ்வளவு காலம் வீடில்லாத காரணத்தினால் உங்களுக்கு அரசின் ஆவணங்கள் பெறுவதில் சிக்கல்கள் இருந்தது. இனி அந்த தொல்லை இல்லை. ரேஷன் கார்டு, ஆதார் மற்றும் இருப்பிடச் சான்று உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் உங்களுக்கு எளிமையாக கிடைக்கும். உங்களின் வாழ்வில் அடுத்தடுத்தக் கட்டத்திற்கு எல்லோரும் போல முன்னேறி செல்லலாம். உங்களுக்கு எல்லா வகையிலும் உதவக்கூடிய இந்த அரசு என்றைக்கும் தயாராக இருக்கிறது. குறிப்பாக, மகளிருக்கும், மாணவர்களுக்கும் ஏராளமான திட்டங்களை நம்முடைய அரசு செய்து வருகிறது. “மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி”யும், பள்ளி செல்லும் மாணவர்களுக்கு “முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்”, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு “புதுமைப் பெண் திட்டம்”, “தமிழ்ப்புதல்வன் திட்டம்” மூலம் மாதந்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாணவர்களுடைய வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் “நான் முதல்வன்” திட்டம் மூலம் வருடந்தோறும் 30 இலட்சம் இளைஞர்கள் பயன்பெறுகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்” மூலம் மாதந்தோறும் 1 கோடியே 16 இலட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.” என்று கூறினார்.