மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (27.10.2024) சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வின்போது மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ, அப்போதெல்லாம் மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒளியேற்றும் விதமாக பல்வேறு திட்டங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் குறிப்பாக விடியல் பயணம் திட்டத்தை
அறிவிக்கும்போது அதில் மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் கட்டணமில்லாமல் அரசு பேருந்துகளில் பயணிக்கலாம் என்று
உத்தரவிட்டிருந்தார்கள். அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரு.1000 மாக இருந்த்தை ரூ.1,500 என்று உயர்த்தி வழங்கி வருகின்றார்கள். சட்டமன்றத்தில் என்னுடைய முதல் பேச்சிலேயே மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக குரல் கொடுத்திருந்தேன். இப்படி கழகமும், கழக அரசும் என்றைக்கும் மாற்றுத்திறனாளின் நலனுக்காக தொடர்ந்து உழைத்து வருகின்றது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் சிரமம் ஏதுமின்றி கடலை ரசிக்க வேண்டும். கடல் அலையில் தங்களுடைய கால்களை நனைக்க வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதையை உருவாக்கித் தந்தார்கள். 225 மீட்டர் தூரத்திற்கு சென்ற 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதை திறக்கப்பட்து. 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான அந்த பாதையில் இன்றைக்கு ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் தினமும் மெரினாவை ரசித்து வருகிறார்கள். மெரினாவில் கிடைத்து வரும் இந்த வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு கடற்கரைகளிலும் மாறுத்திறனாளிகளுக்கான இந்த சிறப்பு பாதை அமைக்க மாற்றுத்திறனாளிகள் பலர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள். குறிப்பாக டிசம்பர் 3 இயக்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் சகோதரர் திரு.தீபக் நாதன் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். அதன்படி பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை அமைக்க நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டினார்கள். இதன்படி 1 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதை 189 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு வருகின்றது. கிட்டத்தட்ட 40 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. இந்த பணியை வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்து தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முன்பு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. முழுவீச்சில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி இங்கு நடைபெற்று வரும் பணிகளை நானும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளரும் ஆய்வு செய்துள்ளோம். இதனை விரைந்து முடித்து மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி இருக்கின்றோம். மேலும் பல கோரிக்கைகளை மாற்றுத்திறனாளிகள் முன் வைத்துள்ளார்கள். அதன்படி பெசன்ட் நகரை தொடர்ந்து திருவான்மியூர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான இதேபோன்ற சிறப்பு பாதையை கழக அரசு விரைவில் அமைக்க உள்ளது. சென்னை மட்டுமின்றி நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை அமைக்கப்பட உள்ளது என்பதையும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கின்றேன். ஒரு மாத்த்தில் அந்த பணி ஆரம்பிக்கப்பட்டு நான்கைந்து மாதங்களில் நிறைவேற்றப்படும் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன் என்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன்.இ.ஆ,ப., உள்பட அரசு உயர் அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.