சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் ரூ.24.98 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக் கடையினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-115, இராயப்பேட்டை மிர்ஷா ஹைதர் அலிகான் தெருவில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் 2021-22ஆம் ஆண்டிற்கான தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.24.98 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள்  இன்று (09.01.2023) திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழர் திருநாள் தைப்பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாடும் வகையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்க உத்தரவிட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்பினை இன்று  வழங்கி தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை இன்று (09.01.2023) இராயப்பேட்டை, மிர்ஷா ஹைதர் அலிகான் தெருவில் உள்ள நியாயவிலைக் கடையில் வழங்கினார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 40,294 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெற தகுதியடையவர்களாக உள்ளனர்.  இந்த அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் விதமாக, பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-115, இராயப்பேட்டை மிர்ஷா ஹைதர் அலிகான் தெருவில் உள்ள நியாய விலைக் கடை எண் 2 மற்றும் எண் 6 ஆகிய கடைகளில் உள்ள 1,941 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) திரு.நே.சிற்றரசு அவர்கள், துணை ஆணையாளர் (மத்திய வட்டாரம்) (பொ) திரு.எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., அவர்கள், நுகர்வோர் பணிகள் கூடுதல் பதிவாளர் திரு.சங்கர், இ.ஆ.ப., அவர்கள், தேனாம்பேட்டை மண்டலக்குழுத் தலைவர் திரு.எஸ்.மதன்மோகன் அவர்கள், மாமன்ற உறுப்பினர் திருமதி வெ.ஈஸ்வரி வெங்கடேசன் அவர்கள், இணைப் பதிவாளர்கள் திரு.எஸ்.பாபு அவர்கள், திருமதி தேன்மொழி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.