அம்பை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உயர்தர உள்ளுர் பயிர் ரகங்களை பிரபலபடுத்துவதற்கான கண்காட்சி நடந்தது. இதுகுறித்து ஆட்சியர் விஷ்ணு கூறியிருப்பதாவது, நெல்லை மாவட்டத்தில் அநேக விவசாயிகள் இயற்கை வேளாண்மை சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றுள் பல ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும், அதிக விளைச்சல் தருவதாகவும் வறட்சியை தாங்கி வளரக்கூடியதாகவும் உள்ளது. தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் இதற்கான கண்காட்சி நடத்த வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு பயிர் ரகங்களை கண்டறிந்து அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற சிறந்த ரகங்களை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மாவட்டம் தோறும் இது குறித்த கண்காட்சி நடத்த வேளாண்மை துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அம்பை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் 9-ம் தேதி காலை 10 மணக்கு அட்மா வேளாண் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் உயர்தர உள்ளுர் பயிர் ரகங்களை பிரபலபடுத்துவதற்கான கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியில் விவசாயம் மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதி பாரம்பரிய உள்ளுர் ரகங்களை காட்சிப்படுத்தலாம். வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி ரகங்களை காட்சிப்படுத்துதல், விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பராம்பரிய உணவு கண்காட்சி மற்றும் விற்பனை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் நெல்லை மாவட்டத்தில் ஆர்வமுள்ள அனைத்து விவசாயிகளும் தங்களது ரகங்களை காட்சிப்படுத்தவும், கண்காட்சியில் பங்கு பெறவும் வேண்டும். இவ்வாறு ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.