“’வணங்கான்’ படத்தில் சொல்லப்பட்டுள்ளதை விட கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்” – பாலா ஆவேசம்

பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டணை வழங்குவத்தை “வணங்கான்” திரைப்படத்தில் இயக்குநர் பாலா வைத்த்கிருப்பார். அதனால் இப்படத்தை பெண்கள் வரவேற்றார்கள். இது குறித்து பாலா கூறும்போது, “என்னுடைய படங்களின் உச்சக்கட்ட காட்சியில் தொடர்ந்து வன்முறை, ரத்தம், சோகம் இடம்பெறுகிறதே, இது உங்கள் குருநாதர் பாலுமகேந்திராவிடம் இல்லையே.. உங்களிடம் மட்டும் எப்படி என நீங்கள் (நிருபர்) கேட்கிறீர்கள், இது கற்றுக்கொண்டு வருவதில்லை.. அது ரத்தத்திலேயே இருக்கிறது. நான் சொல்வது தவறான பதிலாக கூட இருக்கலாம்.. இந்த படத்தின் கதை சென்னையில் நிஜமாகவே ஒரு பள்ளியில் நடந்த நிகழ்வு தான்.. பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை.. பாலியல் கொடுமைகளுக்கு இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளதை விட இன்னும் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.*******

பேசிப்பேசி தான் எல்லா விஷயத்தையும் புரிய வைக்க வேண்டும் என்கிற இந்த காலகட்டத்தில் பேசாமலும் புரிய வைக்கலாம் என எடுத்துக்கொண்ட ஒரு முயற்சி தான் அருண்விஜயின் வாய் பேச முடியாத, காது கேட்காத கதாபாத்திரம். கிறிஸ்துவத்தை கிண்டல் பண்ணுகிறேனா என தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அந்த தங்கை கதாபாத்திரம் பாடும் ஒரு பாடலை ஒருமுறை கேட்டுப் பாருங்கள்.. அதன்பின் நீங்கள் அப்படி சொல்லவே மாட்டீர்கள்.. நடிகர் திலகம் சிவாஜியை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்பதால் அவரைப் போன்ற தோற்றம் கொண்ட ஒரு கதாபாத்திரம் என் படத்தில் வந்து விடுகிறதோ என்னவோ ?

இந்த படத்தில் எப்படி ஜெயிலில் இரண்டு பெண்கள் சர்வ சாதாரணமாக ஒரு கைதியை சென்று பார்க்க முடியும் என சிலர் லாஜிக் கேட்டார்கள் ஆனால் அது ஜெயில் அல்ல.. அது மருத்துவமனையிலேயே உள்ள தனியான நோயாளிகள் பிரிவு. நீதிபதி அதைத்தான் உத்தரவாக சொல்லி இருப்பார். அதை பலர் கவனிக்க தவறியதால் தான் லாஜிக் மிஸ்டேக் என கூறுகிறார்கள். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திலிருந்து மிஸ்கினுடன் இணைந்து ஒரு படம் பண்ணி விட வேண்டும் என ஆர்வமாக இருந்தேன். அது இந்த படத்தில் நிறைவேறி விட்டது.

சூர்யா நடித்திருந்தால் இந்த படம் எப்படி இருந்திருக்கும் என்கிற கேள்வி இப்போது தேவையில்லை. ஏனென்றால் அருண்விஜய் நடித்து, இதோ இப்போது இந்த படத்தை நீங்களே ஹிட் பண்ணியும் கொடுத்து விட்டீர்கள். என்னை எல்லோரும் கோபக்காரன் என்றும், என்னிடம் பயப்படுகிறார்கள் என்றும் சொல்கிறீர்கள். அப்படி இதுவரை எங்காவது நடந்திருக்கிறதா ? தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அருண்விஜய், இதற்கு முன் நடித்த, என்னுடன் பணியாற்றியவர்களிடம் கூட கேட்டுப் பாருங்கள். என்றாவது ஒரு நாள் கூட யாரிடமாவது முகம் சுண்டி இருக்கிறேனா என்று கேட்டு பாருங்கள்.

என்னுடைய படங்களில் நடித்த ஹீரோக்கள் அடுத்து என் படங்களுக்கு மீண்டும் நடிக்க வருவது இல்லையே எனக் கேட்கிறீர்கள்.. ஏன் சூர்யா, ஆர்யா எல்லோருமே நடித்திருக்கிறார்கள் தானே..? அது மட்டுமல்ல புதுப்புது நடிகர்களுடன் பணியாற்றும்போது புது அனுபவங்கள் கிடைக்குமே. மாற்றுத்திறனாளிகளை பார்த்துவிட்டு பரிதாபப்பட்டு அப்படியே விலகி செல்லக்கூடாது. அவர்களின் உலகத்தையும் நாம் காட்ட வேண்டுமே. நம்மிடையே தானே, நம்மை நம்பித்தானே அவர்களும் வாழ்கிறார்கள்.

பொங்கலுக்கு வெளிவந்த மதகஜராஜா படம் வெற்றி பெற்றிருக்கிறது. விஷாலுக்கு என் வாழ்த்துக்கள். விஷாலுக்கு சமீபத்தில் உடல்நல குறைவு ஏற்பட்டதற்கு ‘அவன் இவன்’ படத்தில் நான் அவரது கண் பார்வை குறைபாடான கதாபாத்திரத்தை கொடுத்தது தான் என ஒரு சிலர் குற்றம் சாட்டி பேசி வருகிறார்கள். இன்னும் சிலர் நான் அவரது கண்ணை தைத்து விட்டதாக வேறு கூறினார்கள். இதில் நான் என்ன செய்வது ? அவரவர்களுக்கு தோன்றியதை பேசுகிறார்கள். அதை கண்டுகொள்ள தேவையில்லை. அதேபோல சீமான் பெரியார் பற்றி என்ன சொன்னார் என்று இப்போது வரை எனக்கு தெரியாது. நேற்று கூட அவரிடம் பேசினேன். இது பற்றி நானும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவரும் என்னிடம் அரசியல் பேச மாட்டார்” என்று கூறினார்.