“ராஜாகிளி” திரைப்பட விமர்சனம்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உமாபதி ராமைய்யா இயக்கத்தில் தம்பி ராமைய்யா, சமுத்திரகனி, தீபா, பர்வீன்குமார், டேனியல் அன்னி போப், பழ.கருப்பையா, வெற்றிக்குமரன், அருள்தாஸ், சுவேதா, ரேஷ்மா பசுபலேடி, சுபா, வி.ஜே.ஆண்ட்ரூஸ், மாலிக், கிங்காங் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ராஜாகிளி”. மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் குப்பை மேட்டில் கிடக்கும் சோறை எடுத்து சாப்பிடுகிறார் தம்பி ராமைய்யா. இதைப் பார்த்த சமூக சேவகர் சமுத்திரகனி, அவரை பிடித்துவந்து சிகை அலங்காரம் செய்து குளிக்கவைத்து புத்தாடை அணிவித்து உணவு ஊட்டிவிட்டு படுக்க வைக்கிறார். தம்பி ராமைய்யா தூங்கியபிறகு அவர் வைத்திருந்த அழுக்கு மூட்டையை பிரித்துப்பார்க்கிறார். அதில் ஒரு நாளேடு இருக்கிறது. அதை படித்து பார்த்த சமுத்திரகனி, தம்பி ராமைய்யா மிகப் பெரிய தொழில் அதிபர் என்றும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களுக்கு சொந்தக்காரர் என்று தெரிந்து அதிர்ச்சியடைகிறார். இந்தியாவிலுள்ள பணக்காரர்களில் ஒருவரான தம்பி ராமைய்யா எப்படி பிச்சைக்காரரானார்? ஏன் சித்தபிரமை பிடித்து வீதிகளில் அலைந்தார்? என்பதுதான் கதை. இப்படத்திற்கு தம்பி ராமைய்யாவே கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையும் அமைத்திருக்கிறார். அவரது மகன் உமாபதி தம்பி ராமைய்யாதான் இப்படத்தையும் இயக்கியிருக்கிறார். படத்தின் ஒவ்வொரு உரையாடல்களும் உயிரோட்டமாக இருக்கிறது. கள்ளகபடமில்லாத கதாபாத்திரத்தில் தம்பி ராமைய்யா அசத்துகிறார். காசுக்காக மனைவியை விற்கும் காட்சி நகைச்சுவைக்காக வைத்திருந்தாலும், அங்கே தமிழனின் பண்பாடு எரிந்து சாம்பலாகிறது. வயோதிகத்திலும் பெண்ணாசையால் பித்துபிடித்து துள்ளாட்டம் போடும் காட்சிகள், சில தொழிலதிபர்களின் உண்மைச் சம்பவத்தை நினைவு படுத்துகின்றன. ஒழுக்கமான வழியில் செல்லும் கணவனை மனைவியின் சந்தேகம்தான் அவனை தடம்மாறி செல்ல வைக்கிறது என்பதை மனைவிமார்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார் இயக்குநர் உமாபதி தம்பி ராமைய்யா. வழிதவறி வீழ்ந்துகிடக்கும் கணவனை கை கொடுத்து தூக்கி நிறுத்துபவள் மனைவி மட்டும்தான் என்பதை காட்டி, பெண்மைக்கு பெருமை சேர்த்த இயக்குநரை பாராட்ட வேண்டும். தனது இயல்பான நடிப்பால் சமுத்திரகனி திரைவானில் மின்னுகிறார். இளம் மனைவிமார்களின் இயற்கை உபாதைக்கு கோடி கோடியாய் கொட்டிக் கொட்டிக் கிடக்கும் பணம் பயன்படாது என்பதை, வெளிநாடுகளில் வேலை பார்க்கும் கணவன்மார்களுக்கு நாசூக்காக நகைச்சுவையுடன் அறிவுரை கூறும் கிளிதான் “ராஜாகிளி”. கதாபாத்திரத்திற்கேற்ற நடிகர்களின் தேர்வும் இசையும் ஒளிப்பதிவும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன.