தமிழக மீனவர்களைப் பாதுகாக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? வைகோ கேள்வி: அமைச்சர் விளக்கம்

கேள்வி எண் 1350 (9.12.2021)

கீழ்காணும் கேள்விகளுக்கு, அயல் உறவுத் துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?

1. தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படைத் தாக்குதல்கள், முன்பை விடக் கூடி இருக்கின்றதா?

2. அவ்வாறு இருப்பின், கடந்த இரண்டு ஆண்டு விவரங்கள் தேவை;

3. இந்தப் பிரச்சினை குறித்து, தூதரக நிலையில் அரசு ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொண்டதா?

4. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள்;

5. இந்திய-இலங்கை மீனவர்கள் இடையை நீண்ட காலமாக நிலவுகின்ற இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?

அயல் உறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் அளித்த விளக்கம்

1 முதல் 5 வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்:

கடந்த இரண்டு ஆண்டுகளில், இலங்கைக் கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்கள், தாங்கள் தாக்கப்பட்டதாகக் கூறி இருக்கின்றார்கள்.

2. இந்திய மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்குத்தான், இந்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகின்றது. இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டது குறித்து, உயர் அதிகார நிலையில், பேசி இருக்கின்றோம்; குறிப்பாக, 2020 செப்டெம்பர் மாதம் நடைபெற்ற காணொளி சந்திப்பின்போது, இந்தியப் பிரதமர், மீனவர் பிரச்சினை குறித்து, இலங்கைப் பிரதமரிடம் நேரடியாகப் பேசினார். இந்த ஆண்டு ஜனவரி மாதம், அயல் உறவுத் துறை அமைச்சர் கொழும்பு சென்றபோது, இலங்கை மீன்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து, மீனவர்கள் குறித்த அனைத்துப் பிரச்சினைகளையும் விரிவாகப் பேசினார். 2021 அக்டோபர் மாதம், இந்திய அயல் உறவுத்துறைச் செயலர், இலங்கை சென்றபோதும், இலங்கை அரசு அதிகாரிகளுடன் இதுகுறித்துப் பேசினார். மீனவர்களின் பிரச்சினைகளை, மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும், என இலங்கை அரசுக்கு வலியுத்தினோம்.

அந்த வகையில், ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு  உடன்படிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்; குறிப்பாக, எந்தக் காரணத்தைக் கொண்டும், எந்தச் சூழ்நிலையிலும், தாக்குதல் நடத்தக் கூடாது என்பதை வலியுறுத்தினோம்.

2016 ஆம் ஆண்டு, 2+2 முயற்சிகளின் விளைவாக, இரு நாடுகளின் அயல் உறவு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்கள் தில்லியில் சந்தித்துப் பேசினர். மீனவர்களின் பிரச்சினைகள் குறித்துத் தீர்வு காண்பதற்காக, இருதரப்பு கூட்டுப் பணிக்குழு (Joint Working Group) மீன்வளத்துறை அமைச்சர்கள் சந்திப்புகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

2020 டிசம்பர் 30 ஆம் நாள், கூட்டுப் பணிக்குழுவின் நான்காவது அமர்வு கூடி, மீனவர்களின் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் பேசப்பட்டது. குழுவின் ஐந்தாவது கூட்டம், விரைவில் நடைபெற ஏற்பாடு செய்து வருகின்றோம்.

இவ்வாறு, அமைச்சர் விளக்கம் அளித்து இருக்கின்றார்.