நீட் தேர்வினால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்படுவது இல்லை என்று பரவலாக குற்றம் சாட்டப்படும் நிலையில், அடித்தட்டு மக்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட்தேர்வு, பல மாணவ, மாணவியரின் உயிருக்கு உலை வைத்து வருகிறது. மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் (நீட்) நுழைவுத் தேர்வு நடத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரி, தமிழ்நாடு சட்டப் பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. இதனிடையே, நடப்பாண்டு நீட் தேர்வும் நடைபெற்று முடிந்துள்ளது. நீட் தேர்வு நடந்த நாளிலேயே மேட்டூர் மாணவர் தனுஷ் தற்கொலை, தேர்வு எழுதி முடித்து வந்த அரியலூர் மாணவி கனிமொழி தோல்வி பயத்தால் தற்கொலை என இரண்டு துயர சம்பவங்கள் நடந்தன. மாணவ செல்வங்கள், எதிர்நீச்சல் போட்டு, வாழத் துணிய வேண்டும். நம்பிக்கை இழக்கக் கூடாது. உங்கள் உயிர்களைப் போக்கிக் கொண்டால், பெற்றோரும், உற்றாரும் வாழ்நாள் முழுவதும் கண்ணீர் விடுவார்கள். சமூகத்திற்கும், நாட்டிற்கும், வீட்டிற்கும் நீங்கள் ஆற்ற வேண்டிய பெரும் பணிகள் நிரம்ப இருப்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தேன். இந்நிலையில், மூன்றாவதாக, வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த மாணவி சௌந்தர்யா, தோட்டபாளையம் பள்ளியில் படித்து, 510 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். மருத்துவராகும் கனவோடு நீட் தேர்வு எழுதிய சௌந்தர்யா, தேர்வில் தான் தோல்வியடைந்து விடுவேன் என தோன்றுவதாக பெற்றோரிடம் கதறி அழுத வண்ணம் இருந்திருக்கிறார். இந்நிலையில், மாணவி சௌந்தர்யா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்தி வேதனை அளிக்கின்றது. அவரை இழந்து வாடும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இதன் மூலம் நீட் தேர்வினால் தமிழ்நாட்டின் பலி எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. நீட் எழுதிய மாணவச் செல்வங்கள், எதிர்நீச்சல் போட்டு, வாழத் துணிய வேண்டும். நம்பிக்கை இழக்கக் கூடாது என எத்தனையோ அறிவுரைகள் வழங்கினாலும் இதுபோன்ற முடிவை ஒரு நிமிடத்தில் எடுப்பது வேதனை தருகிறது. மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம் என்று வேண்டி கேட்டுக்கொள்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க