குஜராத் துயரம் வைகோ இரங்கல்

குஜராத் மாநிலத் தலைநகர் காந்திநகருக்கு மேற்கே 240 கி.மீ. தொலைவில், மோர்பி நகரில் உள்ள மச்சு நதி மீது 230 மீட்டர் நீள தொங்கு பாலம் அமைந்துள்ளது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கிய இடமாக இந்தப் பாலம் விளங்குகிறது.

புனரமைப்புப் பணிகள் முடிந்து, அக்டோபர் 26 ஆம் தேதி குஜராத் புத்தாண்டு அன்று இப்பாலம் திறக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதால், பாலத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்திருக்கிறது. இதனால் எடையைத் தாங்க முடியாமல் மாலை 6.30 மணி அளவில் பாலம் அறுந்து விழுந்து, விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் 140 பேர் மச்சு நதியில் விழுந்து மரணமடைந்துள்ளனர் என்பதும், மேலும் 60 பேரைக் காணவில்லை என்ற செய்தியும் தாங்க முடியாத துயரத்தைத் தருகிறது. நதியில் விழுந்தவர்களில் 177 பேர் மீட்கப்பட்டுள்ளதும், பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்த சுமார் 10 பேர் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதும் ஆறுதல் அளிக்கிறது.

குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்துள்ள இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு குஜராத் மாநில அரசு உரிய கருணைத் தொகை அளிப்பதுடன், காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.