இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் கூடங்குளத்தில் அமைத்து வரும் 3 மற்றும் 4 ஆவது அணுஉலைகள் செயல்படத் தொடங்கியதும், அவற்றிலிருந்து உண்டாகும் அணுக் கழிவுகளையும் கூடங்குளம் வளாகத்தின் உள்ளேயே சேமித்து வைப்பதற்கான இடத்தேர்வு அனுமதியை (Siting Clearance) வழங்கி இருக்கிறது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 2013 இல் பிறப்பித்த உத்தரவில், அணுக் கழிவுகளைச் சேமித்து வைத்திட, அணு உலைகள் இருக்கும் இடத்திலிருந்து தொலைவில் ஒரு இடம் (Away From Reactor -AFR) அணுக் கழிவுகளை நிரந்தரமாகப் பாதுகாக்க ஆழ்நிலக் கருவூல மையம் (Deep Geological Repository – DGR) ஆகிய இரண்டு வகையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இதில் அணுக் கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான கட்டமைப்பு (AFR) ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தது. உச்சநீதிமன்றம் வழங்கிய கால அவகாசம் 2018, மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், தேசிய அணுமின் கழகம் ஏ.எஃப்.ஆர். தொழில்நுட்பத்தை வடிவமைப்பதில் சிக்கல்களைச் சந்தித்து வருவதால், மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தது. மேலும் இதைப் போன்ற மென்நீர் உலைகள் இந்தியாவில் முதல் முறையாக கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், ஏ.எஃப்.ஆர். தொழில்நுட்பத்தை செயல்படுத்துவது சவாலான பணி என்று தேசிய அணுமின் கழகம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது. மீண்டும் இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளைப் பாதுகாக்கும் வகையில் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அணுக்கழிவு பாதுகாப்பு பெட்டகத்தை அமைத்திட வேண்டும்; இது குறித்த திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று 2018 ஆகஸ்ட் 24 ஆம் தேதி உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக கூடங்குளம் அணுஉலை வளாகத்திற்குள் ஏ.எஃப்.ஆர். பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்கி, அணுக்கழிவுகளைச் சேமித்திட தேசிய அணுமின் கழகம் பணிகளைத் தொடங்க திட்டமிட்டது. இதற்காக 2019 ஜூலை 10 ஆம் நாள் நெல்லை மாவட்டம் இராதாபுரத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கூடங்குளம் அணுஉலைகளையே நிரந்தரமாக மூடிவிட வேண்டும் என்ற கூடங்குளம், இடிந்தகரை வட்டார மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில், அங்கேயே அணுக்கழிவு மையத்தை அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தற்போது மீண்டும் ஒன்றிய அரசு, கூடங்குளம் அணுஉலை வளாகத்தின் உள்ளே அணுக்கழிவு சேமிப்பு மையத்தை அமைப்பதற்கு இடத்தைத் தேர்வு செய்ய அனுமதி அளித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும். இது கடும் கண்டனத்திற்கு உரியது. அணுக்கழிவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்க உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் “ஆழ்நிலக் கருவூல மையம் (DGR)” அமைப்பதற்கான இடமும், தொழில்நுட்பமும் இன்றுவரை இந்தியாவில் இல்லை. இந்தச் சூழலில் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை கட்டமைத்து, அதில் கூடங்குளம் அணுஉலை மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள மற்ற 22 அணுஉலைகளின் கழிவுகளையும் கொண்டுவந்து குவிப்பதற்கான அபாயகரமான திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய அரசு முனைப்பாக இருக்கிறது.
அணுக் கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் இந்திய அரசிடம் இதுவரையில் இல்லை என்பதை ஒன்றிய அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளே அணுக்கழிவுகளை முழுமையாக செயல் இழக்கச் செய்யும் தொழில்நுட்பம் இன்றி திணறிக் கொண்டிருக்கின்றன. ஏனெனில், புளுட்டோனியம் போன்ற அணு உலைக் கழிவுகளைச் செயலிழக்கச் செய்ய நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலையில், கூடங்குளத்தில் அணுஉலை வளாகத்திலேயே அணுக் கழிவு மையத்தை உருவாக்கி, அணுக்கழிவுகளைக் கொட்டி சேமிக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்திருப்பது தென் தமிழ்நாட்டையே சுடுகாடாக ஆக்கும் முயற்சியாகும். இந்த நாசகார திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியை ஒன்றிய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும். வலியுறுத்துகிறேன்.