தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின பெண்களுக்கு இடஒதுக்கீட்டிற்குள் இடஒதுக்கீடு வேண்டும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் வைகோ வலியுறுத்தல்

நூற்று இருபத்தி எட்டாவது அரசியலமைப்பு (திருத்தம்) மசோதா, மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது மாநிலங்கள் அவையில் நேற்று 21.09.2023 நடைபெற்ற விவாதத்தில் வைகோ எம்.பி.அவர்கள் ஆற்றிய உரை:-

துணைத்தலைவர் அவர்களே, இந்த மசோதாவை ஆதரிக்கிறேன்.

இங்கிலாந்தில் கடந்த நூற்றாண்டில் பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. எனவே அவர்கள் வாக்களிக்கும் உரிமைக்காக அரசுக்கு எதிராகப் போராடினர். பெண்கள் அமைப்பின் தலைவியாக இருந்த டேவிஸ் எமிலின் பேங்குர்ஸ்ட்  (Davies Emmeline Pankhurst) ஒரு நாள் லண்டன் அஞ்சல் நிலையத்திற்குச் சென்று,  பிரதமரின் இல்லத்திற்கு ஒரு பார்சல் அனுப்ப வேண்டும் என்றார். ‘என்ன பார்சல்?’ என்று கேட்டனர். ‘நான் தான் பார்சல்’ என்று சொல்ல அவர்கள் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தனர். உயிருடன் இருப்பவரை பார்சல் அனுப்புவதற்கு விதி உள்ளதா? என்று யோசித்தனர். பின்னர் அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?  அவரது மணிக்கட்டில் ஒரு பேட்ஜைக் கட்டி பிரதமரின் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் பிரதமர் செயலகம் அதிர்ச்சி அடைந்தது. பிரதமர்  அஸ்ஜித் அதிர்ச்சியடைந்து, “என்னைப் பார்க்க என்ன விசயமாய் வந்தீர்கள்?” என்று கேட்டார். “நீங்கள் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவில்லை” என்றார். இறுதியாக போராட்ட முடிவில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.

தமிழகத்தில் 1921 ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது. அவர்கள் தங்கள் ஆட்சியில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கினார்கள்.

1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் சமூகநீதிப் போராளி பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் சுயமரியாதை இயக்க மாநாட்டை நடத்தினார். அதில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்.

60 ஆண்டுகளுக்குப் பிறகு டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழ் நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றவுடன், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கி பெரியாரின் உறுதிமொழியை நிறைவேற்றினார்.

காப்பிய நாயகி கற்புக்கரசி வீரமிக்க பெண்மணி கண்ணகி நமக்கு இருந்திருக்கிறாள். ராணியின் காற்சிலம்பை திருடிச் சென்றதாகப் பொய்க் குற்றச்சாட்டின் பேரில் அவளுடைய அப்பாவி கணவன் கோவலனைக் கொன்று அநீதி இழைத்தார் மதுரை மன்னன். அதை அறிந்த கண்ணகி அரசனை சபிக்கிறாள். மதுரையை தீக்கிரை ஆக்குகிறாள். அவள் நீதியின் உலகளாவிய சின்னமாக இருக்கிறாள்.

 தில்லையாடி வள்ளியம்மை ஒரு தென்னாப்பிரிக்க தமிழ் பெண், தனது ஆரம்ப காலங்களில் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சியை எதிர்த்துப் போராடிய மகாத்மா காந்தியுடன் பணிபுரிந்தார். அவள் பட்டினி கிடந்து இறக்கும் போது, மகாத்மா காந்தி அவளைப் பார்க்கச் சென்றார். அப்போது அவள், “நான் மீண்டும் பிறந்தால், நிறவெறிக்கு எதிராக மீண்டும் உங்களுடன் இணைந்து போராடுவேன்” என்றாள்.

தமிழ்நாட்டில், திப்பு சுல்தான் விருப்பாச்சி கோபால் நாயக்கர் உதவியுடன் சக்திவாய்ந்த பிரிட்டிஷ் இராணுவத்தை  வீர வேலு நாச்சியார்   தோற்கடித்தார்.

இந்த மசோதா ஆரம்பத்தில் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே என்று இருக்கிறது. இது மிகக் குறுகிய காலம் என்பதால் அதை நீட்டிக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.

தொகுதிகளுக்கான எல்லை நிர்ணயப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் இந்த ஏற்பாடுகளை விரைவில் செயல்படுத்த முடியும்.

தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின பெண்களுக்கு இடஒதுக்கீட்டிற்குள் இடஒதுக்கீடு வேண்டும் என்று  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோருகின்றனர். இந்தப் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 இந்த அரசியலமைப்பு (திருத்த) மசோதாவை நான் முழு மனதுடன் ஆதரிக்கிறேன்.