புயல் மழை வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இவ்வாண்டு கலிங்கப்பட்டி பொங்கல் விழா நடைபெறாது – வைகோ அறிக்கை

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மிக்ஜாம் புயலாலும், மித மிஞ்சிய பெருமழைவெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டப் பகுதிகளும் பெரும் பாதிப்புகளுக்குஉள்ளாகி உள்ளன. விவசாயிகள், மீனவர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும்பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்குள்ளும், வீதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து நின்ற காட்சிகளும், மக்கள்பட்ட துயரமும் மனதை வாட்டுகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களின் நேரடி கண்காணிப்பில் அமைச்சர்கள், அரசுத்துறையினர் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை முழு வீச்சில் செய்து வருகின்றனர். அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர், மக்கள் பிரதிநிதிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மறுமலர்ச்சி தி.மு.. மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும், மக்கள் பிரதிநிதிகளும், பாதிக்கப்பட்டபகுதிகளில் தங்களால் இயன்ற நிவாரணப் பணிகளைச் செய்து வருகின்றனர். பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்ற போதிலும் நிலைமை முழுமையாகசீரடைய இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகக்கூடும்.

இயற்கைச் சீற்றத்தால் பல இலட்சம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்ற நிலையில், தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிவாரணத் தொகையை தாராள மனதுடன் வழங்கிட இந்திய ஒன்றிய அரசுஇதுவரை முன்வரவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இத்தகைய சூழ்நிலையில், கடந்த ஐம்பது ஆண்டுகளாக கலிங்கப்பட்டியில் நான் நடத்தி வரும் தமிழர் திருநாள்பொங்கல் விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் இவ்வாண்டு நடைபெறாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.