நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை கேலரிஸ்ட் நிக்கோலய் சச்தேவுக்கும் ஜூலை 10, 2024 அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. சென்னை திரும்பிய மணமக்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். அப்போது நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறும்போது, “நீங்கள் எல்லோரும் இங்கு வந்ததற்கு நன்றி. நிக்கோலய் சொன்னதுபோல என்னுடைய காதல் அவர். ஆனால், என்னுடைய உயிர் சினிமாதான். அதனால், திருமணத்திற்குப் பிறகும் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பேன். வந்து வாழ்த்திய எல்லோருக்கும் நன்றி” என்றார்.*********
நிக்கோலய் பேசியதாவது, “எல்லோரும் வந்ததற்கு நன்றி. தமிழ் இப்போதுதான் கற்றுக் கொண்டு வருகிறேன். பொண்டாட்டி என்ற வார்த்தை மட்டும்தான் இப்போதைக்கு தமிழில் தெரியும். மும்பை இனிமேல் என் வீடு கிடையாது. சென்னைதான் என் வீடு. என்னை நான் அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன். என் பெயர் நிக்கோலய் சச்தேவ். நான் வரலட்சுமி என்ற அழகான பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறேன். திருமணத்திற்குப் பிறகு வரலட்சுமி அவரது பெயரை வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என நிச்சயம் மாற்ற மாட்டார். அவரது பெயர் வரலட்சுமி சரத்குமார் என்று இருப்பதையே நானும் விரும்புகிறேன். ஆனால், நான் அவரது பெயரை எடுத்துக் கொள்கிறேன். நிக்கோலய் வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என்பதுதான் இனி என் பெயர். சரத்குமார் மற்றும் வரலட்சுமியின் பெருமை இனி எனக்கும் சொந்தம். வரலட்சுமி என்னைத் திருமணம் செய்திருந்தாலும் நான் அவருடைய முதல் காதல் இல்லை. அவருடைய முதல் காதல் எப்போதும் சினிமாவில் நடிப்பதுதான். திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து நடிப்பார். உங்கள் அன்பும், ஆதரவும் நிச்சயம் அவருக்கு வேண்டும்” என்றார்.
நடிகர் சரத்குமார், “வரலட்சுமிதான் நிக்கோலயை எங்களுக்கு அறிமுகப்படுத்தினர். நிக்கோலயுடன் எங்கள் குடும்பத்திற்கு கண்டதும் காதல் வந்துவிட்டது. ரொம்ப எனர்ஜிட்டிக்கான மனிதர் அவர். அவர் கொடுத்திருக்கும் சந்தோஷம் நிச்சயம் வாழ்நாள் முழுவதும் தொடரும். இறைவனால், இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர். உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்”.