அரசு மருத்துவக்கல்லூரியில் தனியார் கல்லூரிக்கு இணையாக கட்டணம் வசூலிக்கும் முறையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் – வேல்முருகன்

கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக்கல்லூரியில்  தனியார் கல்லூரிக்கு இணையாக கட்டணம் வசூலிக்கும் முறையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கோரிக்கை மற்றும் மாணவர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக,  இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை, கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகப் பெயர் மாற்றம் செய்து கடந்த 2020-ல் அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், தற்போது பயின்று வரும் மாணவர்களுக்கும், இனிமேல் பயிலும் மாணவர்களுக்கும்,  மற்ற அரசு மருத்துவக்கல்லூரியில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.   ஆனால், 2020 – 2021 கல்வியாண்டில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு, சுயநிதிக் கல்லூரிகள் போன்று, ஆண்டிற்கு 4 இலட்சம் என்ற கணக்கின் படி, 5 ஆண்டுகளுக்கு கட்ட வேண்டும் என கடந்த 26.10.2021 அன்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.  குறிப்பாக, கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக்கல்லூரியில் பயின்று வரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு 13,610 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், மற்ற மாணவர்களுக்கு தலா ரூ.4 இலட்சம் வசூலிப்பது ஏற்க முடியாதது. ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இரு விதமான கட்டணம் என்பது சமூக நீதிக்கு எதிரானது. அதாவது, 2021 – 2022 ஆம் கல்வியாண்டு முதல் அரசால் நடத்தப்படும் கல்லூரிக்கு, சுயநிதிக் கல்விக்கட்டணம் என்பது ஏற்புடையது அல்ல. இதே பிரச்சனையை எதிர்க்கொண்டிருந்த ஈரோடு மருத்துவக் கல்லூரியில் 2019 – 2020 ஆம் கல்வியாண்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி, கல்விக்கட்டணம் ரூ.6,700 மட்டுமே பெறப்பட்டிருக்கிறது.  எனவே, கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக்கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள், ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை கருத்தில் கொண்டும், மாணவர்களின் எதிர்க்காலத்தில் அக்கறைக்கொண்டும், அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.