கடந்த 1950-களில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் சுரங்கங்கள் அமைப்பதற்காக மந்தாரக்குப்பம், நெய்வேலி, கெங்கைகொண்டான் உள்ளிட்ட 23 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளையும், வாழ்வாதாரமாக திகழ்ந்த நிலங்களையும் கொடுத்து விட்டு ஆதரவற்றவர்களாக அங்கிருந்து வெளியேறினர். அதன்பின்னர் 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவ்வாறு ஈகம் செய்த மக்களின் குடும்பங்களுக்கு நியாயமான இழப்பீடும், வேலைவாய்ப்பும் இதுவரை வழங்கப்படவில்லை. அதாவது, தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் வழங்கிய நிலத்தில் இயங்கும் என்.எல்.சி. நிறுவனம் நிலம் கொடுத்தவர்களையோ, 40 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களையோ அந்நிறுவனப் முற்றிலும் புறக்கணித்து விட்டு, இந்திக்காரர்களையும் வடநாட்டுக்காரர்களையும் பெரும் ஊதியத்தில் நிரந்தரப் பணியில் சேர்த்து வருகிறது. வீடு நிலம் கொடுத்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரத்திற்காகப் போராடினால், வட மாநிலத்தவரைக் கொண்டு பணியை மேற்கொள்வோம் என திமிராக நெய்வேலி என்.எல்.சி நிர்வாகம் அறிவிக்கிறது. நிலம் வழங்கியோர்க்கு உரிய இழப்பீட்டை வழங்க மறுப்பது, தமிழர்களுக்கு வேலை வழங்க மறுப்பது, ஏற்கெனவே உள்ள பணியில் உள்ள தொழிலாளர்களை நிரந்தரமாக்க மறுப்பது,என தொடர்ந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வருகிறது.
இத்தகைய சூழலில், என்.எல்.சிக்கு நிலம் வழங்கி அரசியல் அநாதைகளாக நிற்கும் எளியவர்கள் பலர். அவர்களின் உரிமைக்காக, வேலை வாய்ப்பிற்காக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து குரல் எழுப்பியும் போராடியும் வருகிறது. குறிப்பாக, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படியும், தொழிற்சங்கங்களோடு ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் அனைத்து இன்கோசர்வ் தொழிலாளர்களையும் அவரவர் பணியிடங்களில் சேர்த்து நிரந்தரப்படுத்தி, மீதமுள்ள ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் 65,000 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருக்கிறது. அதில், எல்.எல்.சி நிர்வாகம் அனைத்து இன்கோசர்வ் தொழிலாளர்களையும் உடனடியாக பணி நிரந்தரப்படுத்த வேண்டும். என்.எல்.சி நிர்வாகம் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்டதின் படி, பணி நிரந்தரத்தில் மீதமுள்ள 40 விழுக்காடு TECHNICAL படித்தவரை ( பி.இ, டிப்ளமோ, டிகிரி, ஐடிஐ) பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்.எல்.சி நிர்வாகம் அனைத்து இன்கோசர்வ் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2,500 ஊதியம் வழங்க வேண்டும். என்.எல்.சி நிர்வாகம் போடப்பட்ட 12(3) ஒப்பந்தத்தின் படி பணி நிரந்தரம் பெறுகிற இன்கோசர்வ் தொழிலாளர்களுக்கு IW–3 பதவியில் பணியமர்த்த வேண்டும். அனைத்து இன்கோசர்வ், ஹவுசிகோஸ், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி மூப்பை கணக்கிட்டு, 5 ஆண்டுகளுக்கு ஒரு கிரேடு ( பதவி உயர்வு) வழங்க வேண்டும். கூடுதலாக TECHNICAL படித்தவரை SUPER SKILLED GRADE வழங்க வேண்டும்.
விலைவாசி உயர்வுக்கு ஏற்ற வகையில் என்.எல்.சி நிர்வாகம் வழங்கி வருகின்ற அனைத்து Allowance தொகைகளையும் உயர்த்தி வழங்க வேண்டும். வீடு, நிலம் கொடுத்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். விடுபட்ட அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் உடனடியாக சொசைட்டியில் இணைக்க வேண்டும், இன்கோசர்வ் மற்றும் ஹவுசிகோஸ் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து காப்பீட்டு தொகையை மாற்றியமைக்கப்பட வேண்டும் வெளியில் விபத்து மற்றும் இயற்கை மரணமடையும் தொழிலாளர்களுக்கு காப்பீட்டுத்தொகை ரூ.10 இலட்சம் வழங்க வேண்டும்.
இந்த ஆண்டு முதல் தீபாவளிக்கு வழங்கக்கூடிய போனஸ் தொகையை 20% விழுக்காடாக உயர்த்தி வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு விடுபட்ட 3 ஆண்டுகளுக்கான தைத்த சீருடையை உடனடியாக வழங்க வேண்டும்.வருகின்ற மழைக்காலத்தில் பணிக்கு வருவதற்கு ஏதுவாக ரெயின் கோட் விரைந்து வழங்க வேண்டும். இன்கோசர்வ் தொழிலாளர்களுக்கு வீடுகளை என்.எல்.சி நிர்வாகமே நேரடியாக சீர்செய்து வழங்க வேண்டும். அதனை சீர் செய்து தர வேண்டும். தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இ.பி.எப் அலுவலகத்தை நெய்வேலியில் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.