தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, மொரட்டாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இது தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள் 2008இன் படி மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் வாகனங்களைப் பொறுத்து 5 முதல் 7 விழுக்காடு வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வாகனத்தின் வகையைப் பொறுத்து ஒரு பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.150 வரை உயரும்.
இதன் மூலம், நாட்டு மக்களை ஒட்டச்சுரண்டுவது தான் மோடி அரசின் நோக்கம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில், தற்போது சுங்க கட்டணம் உயர்ந்துள்ளதால் அது மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையை உயர்த்தி கோடிக்கணக்கில் மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, தற்போது சுங்க கட்டணத்தை மேலும் உயர்த்தி இருப்பது ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கும்.
நாட்டில் உணவுத்தேவையும், வேலைவாய்ப்பின்மையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சும் விதமாக, தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி கட்டணத்தை ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உயர்த்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.
சுங்கச்சாவடி கட்டண உயர்வு என்பது, லாரி உரிமையாளர்களை மட்டும் பாதிக்கக்கூடிய பிரச்சினை அல்ல; சங்கிலித்தொடர்போல, வாகனப் போக்குவரத்தைச் சார்ந்திருக்கும் சகல துறைகளையும் பாதிக்கக்கூடிய பிரச்சினை. விலைவாசி உயர்வாக மக்களின் தலையில் விடியும் பிரச்சினை.
சுங்கச்சாவடி என்பதே பகற்கொள்ளை என்பதும்; ஒப்பந்ததாரர்கள் போட்ட பணத்தை சில ஆண்டுகளிலே இலாபத்துடன் திரும்ப எடுத்துவிட்ட பிறகும்கூட, தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு கட்டண வசூலுக்கான அனுமதி வழங்கப்பட்டுவருவதென்பதும் ஏற்கனவே பலமுறை அம்பலமான ஒன்றுதான். தற்போது, சுங்கச்சாவடிகளை ஒப்பந்தம் எடுத்திருக்கும் பெருமுதலாளிகளின் இலாப விழுக்காடு குறைந்துவிடக் கூடாதென்பதற்காக, சட்டப்பூர்வமான வழிப்பறியைத் தொடர்வதற்கான அனுமதியை ஒன்றிய அரசு வழங்கியிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டும் தான் இருக்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி, தமிழ்நாட்டில் 20 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும். 2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த போது, சுங்கச்சாவடிகள் குறித்து நான் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பி அதற்கு பதில் அளித்த நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஒன்றிய அரசுடன் பேச்சு நடத்தி, தமிழ்நாட்டிலுள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சாவடிகள் மூடப்படும்; 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே செயல்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதற்கு பிறகு, புதிதாக 19 சுங்கச்சாவடிகள் தொடங்கப்பட்டிருக்கின்றனவே தவிர ஒரு சுங்கச்சாவடி கூட மூடப்படவில்லை. தமிழ்நாடு அரசின் இத்தகைய நடவடிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. எனவே, செப்டம்பர் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சுங்கக்கட்டண உயர்வை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால், ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .