தமிழ்நாட்டில் சுமார் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் உள்ளன. இதில் அரசுப் பாடசாலைகளில் 24,310 தொடக்கப் பாடசாலைகள், 7,024 நடுநிலைப் பாடசாலைகள், 3,135 உயர்நிலைப் பாடசாலைகள், 3,110 மேல்நிலைப் பாடசாலைகள் என 37,579 பாடசாலைகள் இயங்குகின்றன. அரசு உதவி பெறும் பாடசாலைகள் 8,328 செயல்படுகின்றன. இதில் 46 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். தமிழ்நாடு அரசு, அரசுப் பாடசாலைகள் தரமான கல்வியை வழங்கி வருவதால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை பல இலட்சங்களாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், 2025-–2026 கல்வியாண்டில் 500 அரசுப் பாடசாலைகளை தத்தெடுத்து அந்தப் பாடசாலைகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பாடசலைகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாடசாலைக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வரும் காலங்களில் அரசுப் பாடசாலைகளை தனியாரிடம் ஒப்படைப்பதோடு, கல்வியை தனியார்மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக திணிக்கும் முயற்சியே ஆகும். அரசுப் பாடசாலைகளில் பயிலும் பெரும்பாலான பிள்ளைகள் கிராமப்புறங்களில் கல்வியறிவு அற்ற, ஏழ்மை நிலையில் உள்ள குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள். அப்பிள்ளைகளின் முன்னேற்றம், அவர்களின் குடும்பத்தின் முன்னேற்றம் மட்டுமின்றி நாட்டின் முன்னேற்றத்தையும் உள்ளடக்கியது.
அரசுப் பாடசாலைகள் தனியார்மயமாக்கப்பட்டால் ஏழை, எளிய, விளிம்பு நிலை குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். ஆரம்பப் பாடசாலைகளின் இடைநிற்றல் 16 விழுக்காடாக உயர்ந்திருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக, குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அரசுப் பாடசாலைகளின் கட்டமைப்பை பலப்படுத்தி கல்வித் தரத்தை மேம்படுத்தப்படுவதற்கு பதிலாக அரசுப் பாடசாலைகளை தனியார் பாடசாலை நிர்வாகங்களுக்கு தத்துக்கொடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பது, ஏழை, எளிய மக்கள் குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கும் செயலாகும்.
எனவே, 500 அரசுப் பாடசாலைகளை தனியார் பாடசாலைகளுக்கு தத்துகொடுக்கும் முடிவை, தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும். அரசுப் பாடசாலைகளில் அடிப்படை வசதிகளுக்காக, கட்டமைப்பிற்காக போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்து, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.