இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏலம் விடும் மோடி அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கதென்கிறார் வேல்முருகன்

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதும், தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பதும் தான் மோடி அரசின் பொருளாதார கொள்கை. அணுசக்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை, போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு, மின்சாரம், பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் இதர கனிமவளங்கள் துறை, வங்கித்துறை, காப்பீடு மறறும் நிதி சேவைகள் துறை உள்ளிட்ட இன்னும் பல்வேறு துறைகளை தனியார் மயமாக்க மோடி அரசு முயன்று வருகிறது. இது போததென்று, தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் ஒட்டுமொத்த நாட்டின் வளங்களை குத்தகைக்கு விடும் பணியில் மோடி அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. அதாவது, சாலை, ரயில்வே, மின்சாரம், இயற்கை எரிவாயு, சுரங்கம், விமான நிலையம், துறைமுகம், விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட 13துறைகளில், எந்தெந்த அளவு குத்தகைக்கு விடுவது என்றும் அதற்கு எவ்வளவு தொகை எனவும் ஒரு நீண்ட பட்டியல் ஒன்றை மோடி அரசு வெளியிட்டுள்ளது. மோடி அரசின் மோசமான பொருளாதார கொள்கையாலும், அரசின் தவறான நிர்வாகத்தாலும், நாட்டின் பொருளாதாரம் அடிபாதாளத்தில் உள்ளது. போதாத குறைக்கு, கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கால் ஏற்பட்ட வேலையின்மை, வருவாய் இழப்பு உள்ளிட்ட காரணங்களால் நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நலிவடைந்த பொருளாதாரத்தை எப்படி மீட்பது, மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து சற்றும் சிந்திக்காமல், நாட்டின் வளர்ச்சிக்கு அடிநாதமான பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது, தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவது உள்ளிட்ட தரகர் வேலைகளில் மோடி அரசு ஈடுபட்டு வருவது வேதனையானது. 2014-ல் பிரதமரான மோடி, நாட்டின் வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதிலேயே முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, தனது நண்பர்களான அதானி, அம்பானி வகையறாக்களுக்கு நாட்டின் அனைத்துப் பொதுத் துறைகளையுமே படையலாக்கி வருகிறார் மோடி. கார்ப்பரேட்டுகளின் கண்ணசைவுக்கு ஏற்ப,விருப்பங்களுக்கு ஏற்ப, நாட்டின் சட்டம், கொள்கை, திட்டம் ஆகியவற்றை மாற்றி வரும் மோடி அரசு,  எந்தெந்த துறையை எப்படியெப்படி பிரித்து யார் யாருக்குக் கொடுக்கலாம் என்பதை ஆலோசிக்கவே நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமனை நியமித்துள்ளது. ஏழை, எளிய மக்களை வதைக்காமல், அவர்களுக்கான நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தான் சிறப்பான அரசுக்கு அடையாளம்.  ஆனால் மோடி அரசோ, கார்ப்பரேட் நிறுவனங்களின் கஜானாவை நிரப்ப, மக்களின் மடியை அறுக்கும் வேலையை தான் செய்து வருகிறது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பொதுத்துறை  பங்குகளை விற்பதற்கு என்றே தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போதோ நிதியமைச்சகமே அந்தக் காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறது. எனவே, தேசிய பணமாக்கும் திட்டத்தின் மூலம் நாட்டின் சொத்துக்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏலம் விடும் மோடி அரசின் நடவடிக்கை தவறானது. கண்டனத்துக்குரியது. கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுக்கடாங்காத பசிக்கு பொதுத்துறை நிறுவனங்களை ஏலம் விடுவது, நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம். தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் நாட்டின் வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏலம் விடும் நடவடிக்கையை மோடி அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.