இளமை அது ஒரு இனிய பருவம். அந்தப் பருவம் போனால் வராது. ஆனால் அதை அவ்வப்போது நினைத்துப் பார்த்து பரவசமடைய முடியும். அதிலும் பள்ளிப் பருவம் தரும் பசுமை நினைவுகளை அசை போடும்போது அது எல்லை இல்லா ஆனந்தம். அந்த ஆனந்தத்தை இம்மாதம் 20ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று அடைந்தார்கள். தருமபுரி மாவட்டம் மாறண்ட அள்ளியில் பாடசாலை இறுதி வகுப்பு வரை ஒன்றாகப் படித்த மாணவர்கள். பொன்விழா கொண்டாட்டமாய் அவர்கள் அடைந்த பேரானந்தத்துக்கு அளவே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிகழ்ச்சி அமைந்திருந்தது. பாடசாலை இளமை காலத்து நண்பர் ஆறுமுகத்தின் பண்ணை வீட்டில் சங்கமித்து தங்கள் பொன்விழாவை கொண்டாடினார்கள். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பலவிதமான போட்டி அங்கங்களையும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
ஸ்ரீதரன் கிருஷ்ணன் இருவரும் சந்திப்பு நிகழ்ச்சியை தித்திப்பாய் ஆக்கும் வண்ணம் கலகலப்பாய் கொண்டு போனார்கள். மாலா நிம்மி இருவரும் இடையிடையே வந்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டினார்கள். நிகழ்ச்சியின் இடையே தங்களை விட்டு பிரிந்துபோன தோழர்களுக்கும் அவர்கள் அஞ்சலி செலுத்த மறக்கவில்லை. மாலை வரை சென்ற நிகழ்ச்சியில் அன்றைய மாணவர்கள் மட்டுமல்லாது அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும் பங்கு கொண்டு சிறப்பித்தது நிகழ்ச்சியின் சிறப்பு அம்சம். இறுதியில் நன்றி உரை ஆற்றிய பொன்முடி நிகழ்சி சிறக்க உதவிய நண்பர்களை மகிழ்ச்சி மழையில் நனைய வைத்தார். தன்னுடைய பண்ணை இல்லத்தை கொடுத்ததோடு ஓய்வு உறக்கமில்லா உழைப்பையும் தந்த ஆறுமுகம் பிக் பாஸ் என்று பாரட்டப்பட்டு அவர்தம் துணைவியாரோடு சிறப்பு செய்யப்பாட்டார். ஆண்டுதோறும் இப்படி சந்தித்தே தீருவது என்ற உறுதி மொழியோடு அனைவரும் அவரவர் இல்லம் திரும்பினர்.