மனித சுபாவத்தை நகைச்சுவையோடு சொல்லும் படம் “ரகு தாத்தா”

-ஷாஜஹான்-
விஜய் கிரகந்தூர் தயாரிப்பில் சமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்தசாமி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ரகு தாத்தா”. 1960 ஆம் ஆண்டில் நடக்கும் கதையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆணுக்கு பெண் அடிமையாக இருக்கும் காலகட்டம் அது. ஆனால் கீர்த்தி சுரேஷ் முற்போக்கு எண்ணம் கொண்டவராக ஆணாதிக்கத்தை எதிப்பதால் திருமணமே வேண்டாம் என்ற கொள்கையோடு
வங்கியில் வேலைபார்க்கிறார். இந்தி மொழி படித்தால்தான் வங்கியில் பதவி உயர்வு கிடைக்கும் என்றால் அந்த உயர்பதவியே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு இந்தி எதிர்ப்பு கொள்கையிலும் பிடிவாதமாக இருக்கிறார். இந்நிலையில் தாத்தா எம்.எஸ்.பாஸ்கருக்கு புற்று நோய் இருப்பதாக மருத்துவர் கூறுகிறார். அதனால் இறப்பதற்கு முன் பேத்தி கீர்த்தி சுரேஷின் திருமணத்தை பார்த்துவிட தாத்தா எம்.எஸ்.ஆசைப்படுகிறார். இதனால் திருமணத்திற்கு கீர்த்தி சுரேஷ் சம்மதம் தெரிவிக்கிறார். ஆனால் தனது முற்போக்கு கொள்கையை ஏற்பவராக மாப்பிள்ளை இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கிறார். அதன்படி ரவீந்திர விஜய் மாப்பிள்ளயாக வர நிச்சயதார்த்தமும் நடக்கிறது. நிச்சயதார்த்தம் நடந்த பிறகு மாப்பிள்ளை தனது கொள்கைக்கு எதிராக ஆணாதிக்கம் கொண்டவர் என்று கீர்த்தி சுரேஷ்க்கு தெரியவருகிறது. திருமணம் நடந்ததா? அல்லது ஆணாதிக்கத்திற்கு கீர்த்தி சுரேஷ் அடிபணிந்தாரா? என்பதுதான் கதை. போராளியாக கீர்த்தி சுரேஷ் அபாரமாக நடித்துள்ளார். இந்தியை எதிர்க்கவில்லை இந்தி திணிப்பைதான் எதிர்க்கிறோம் என்று கீர்த்தி சுரேஷ் பேசும் வசனம் அரசியல் அந்தர்பல்டியை ரசிக்க முடிகிறது. நடித்த அனைவரும் அவரவர்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்கள். எம்.எஸ்.பாஸ்கரின் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை. குழைவதிலும் பிறகு நெஞ்சை நிமிர்த்துவதிலும் அரசியல்வாதிகளை அடையாளம் காட்டி பாராட்டை பெறுகிறார் ரவீந்தர விஜய். சலிப்புதட்டாமல் நகைச்சுவையோடு படத்தை நகர்த்தியிருக்கும் இயக்குநர் சமன் குமார் பாராட்டுதலுக்குரியவர்