“குடும்பஸ்தன்” திரைப்பட விமர்சனம்

வினோத்குமார் தயாரிப்பில் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், ஜான்வி மேக்னா, ஆர்.சுந்தர்ராஜன், கனகம், நிவேதியா ராஜப்பன், குருசோமசுந்தரம், ஷான்விகாஶ்ரீ, முத்தமிழ், பிரசன்னா பாலச்சந்திரன், ஜான்சன் திவாகர், அனிரூத், பாலாஜி சக்திவேல், அபிலாஷ், டி.எஸ்.ஆர்.ஶ்ரீநிவாசன், காயத்ரி, வர்ஜீ ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “குடும்பஸ்தன்”. மணிகண்டனின் மனைவி ஜான்வி மேக்னா ஐ.ஏ.எஸ்.படிக்க ஆசைப்படுகிறார். அம்மா கனகம் ஆன்மீக சுற்றுலா செல்ல ஆசைப்படுகிறார். அப்பா ஆர்.சுந்தரராஜன் தனது பழைய வீட்டை புதுப்பிக்க ஆசைப்படுகிறார். மூவரின் ஆசைகளையும் நிறைவேற்றுவதாக மணிகண்டன் சொல்கிறார். ஆனால் மணிகண்டன் தான் வேலைபார்க்கும் அலுவலகத்தின் மேலாளரோடு சண்டைபோட்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு வருகிறார். இந்நிலையில் அம்மா, அப்பா, மனைவி ஆகியோரின் ஆசைகளை வேலையிழந்த மணிகண்டன் நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதுதான் கதை. படம் ஆரம்பம் முதல் முடிவுவரை நகைச்சுவை காட்சிகளால் நிரப்பியிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி. கடன்காரர்களிடமிருந்து தப்பி ஓடுகின்ற காட்சியில், மணிகண்டன் நகைச்சுவையோடும் தன்மானமிழந்து தவிக்கும் உணர்வையும் ஒருசேர காட்டும் காட்சியில் இமயத்தின் உச்சிக்கு உயர்ந்திருக்கிறார். தன்கவலையை மறக்க, தூங்கிக் கொண்டிருக்கும் மனைவி ஜான்வி மேக்னாவின் வயிற்றில் கருவாக இருக்கும் பாப்பாவிடம் மணிகண்டன் பேசும் காட்சியில் பார்வையாளர்களின் கண்கள் நனைகின்றது. வேலைக்கு சீனாவுக்குச் செல்வதாக இருக்கும் குருசோமசுந்தரம் சீனாக்காரனாகவே மாறி அடிக்கும் கூத்துகள் சிரிக்காதவன்கூட் சிரித்துவிடுவான். அப்படி நடிக்கிறார் குருசோமசுந்தரம். ஆபாசமில்லாத  இத்திரைப்படத்தை குடும்பத்தினரோடு சென்று பார்க்கலாம். இது பொழுதுபோக்கு படமட்டுமல்ல, குடும்பத்தை குதுகூலமாக்க நடத்துகின்ற பாடம்தான் “குடும்பஸ்தன்” மதிப்பிடு 5க்கு 4.