அண்ணா நகர் லயன்ஸ் கிளப் நடத்திவரும் சுவாமி விவேகானந்தா பரிசோதனை மையம், ஏழை எளியமக்களுக்காக அனைத்து பரிசோதனையும் மிக குறைந்த செலவில் செயல்படுத்தி வருகிறது. இதன் 26ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, மக்கள் சேவையில் பணியாற்றி வரும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை பாராட்டி பேசி, நினைவு பரிசை வழங்கினார் நடிகர் விஷால். இந்த நிகழ்வில் விஷால் பேசும்போது, “லயன்ஸ் கிளப் சார்பில் வசதி இல்லாதவர்களுக்கு மருத்து. உதவி செய்யும் விஷயம் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எங்களுடைய அறக்கட்டளைக்கும் அவர்கள் நிறைய உதவி செய்திருக்கிறார்கள் என உதவியாளர் ஹரி மூலமாக தெரிய வந்து, சந்திக்கும் எண்ணத்தில் இருந்தேன். அதற்காகவே இந்த நிகழ்வுக்கு வந்துள்ளேன். மற்றபடி இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினர் நான் அல்ல. இதோ இங்கே அமர்ந்திருக்கிறார்களே மருத்துவர்கள், ஊழியர்கள், தன்னார்வலர்கள் இவர்கள்தான்.. பத்து ரூபாய்க்கு ரத்த பரிசோதனை என்பது சாதாரண விஷயம் அல்ல.. இதை நான் வெளியே சொன்னால் கூட பைத்தியக்காரத்தனமாக பேசாதே, எங்கே நடக்குது இது என்று கேட்பார்கள். இதைவெளி உலகத்தில் உள்ள எல்லோருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும், அதற்கு என் முகம் பயன்படவேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்விற்கு வந்துள்ளேன்.” என்றார்.