“வல்லான்” திரைப்பட விமர்சனம்

டாக்டர் வி.ஆர்.மணிகண்டராமன் மற்றும் வி.காயத்ரி தயாரிப்பில் வி.ஆர்.மணி சேயோன் இயக்கத்தில் சுந்தர் சி, ஹேபா படேல், கமல் காமராஜ், அபிராமி வெங்கடாச்சலம், சாந்தினி தமிழரசன், தலைவாசல் விஜய், ஜெயகுமார், டி.எஸ்.கே. ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “வல்லான்”. சுந்தர் சி இடைநீக்கம் செய்யப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரி. பெரும் செல்வந்தரான டி.எஸ்.கேவின்  மகள் அபிராமி வெங்கடாச்சலத்தின் கணவரை, ஒரு மர்ம மனிதன் கொலை செய்து விடுகிறான். எதற்காக கொலை செய்யப்படுகிறான்? கொலையாளி யார்? இடைநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சுந்தர் சி ஏன் கொலையாளியை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்? என்பதை ஒரு மர்ம நாவல் போல் திரைக்கதையை இயக்கியிருக்கிறார் வி.ஆர்.மணி சேயோன். படத்தின் முதல் பாதி சலிப்பு தட்டாமல் விறுவிறுப்பாக செல்கிறது. படத்தின் பின் பகுதி விறுவிறுப்பாக செல்லும் போது இடையில் சுந்தர் சியின் காதல் நினைவுகளை காட்டி, துப்பறியும் வேகத்தை குறைத்து விட்டார் படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ். படத்தின் பெரும் பகுதி சண்டைக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சுந்தர் சி தனது வழக்கமான யதார்த்தமான நடிப்பிலிருந்து விலகிச் செல்லாமல் அதே நடிப்பை நகல் எடுத்து நடித்துள்ளார். (அதே சிரித்த முகத்துடன்). (“அதென்ன சுந்தர் சி குத்தும் ஒரு குத்தில் காங்கீரிட் தூண் சிதைந்து போகுமா? சண்டை மாஸ்டர் விக்கி. அதுசரி கற்பனைக் குதிரைக்கு கடிவாளம் எதற்கு”.) திரைக்கதை ஓட்டத்திற்கு மிகவும் பக்கபலமாக இருப்பது சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசைதான். உச்சக்கட்ட காட்சியில் கொலைக்காண காரணத்தின் மர்ம முடிச்சுகளை எளிதாக அவிழ்த்திருக்கும் இயக்குநர் வி.ஆர். மணி சேயோன் பாராட்டுதலுக்கும் பார்வையாளர்களின் கையோசைக்கும் உரியவர். மதிப்பீடு 5க்கு 3.