பெண்கள் தினத்தினை முன்னிட்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விவி என்டெர்டெயின்மென்ட் நிறுவனர் நடிகர் விஜய்விஷ்வா அமெரிக்கன் கல்லூரியுடன் இணைந்து இரண்டு மகத்தான சாதனைகளை கல்லூரியின் மைதானத்தில் நிகழ்த்தியுள்ளது. முதலாவது சாதனையாக 2000 பெண்கள் கைகோர்த்து விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் உருவப்படத்தை மனித சங்கிலியுடன் இணைந்து உருவாக்கினார்கள். இந்த உருவ அமைப்பு விண்வெளி ஆராய்ச்சியில் அவரது சாதனைகளிலிருந்து பெறப்பட்ட ஒற்றுமை, படைப்பாற்றல் மற்றும் உத்வேகத்தை குறிக்கிறது. இரண்டாவதாக சாதனையாக மிகப்பெரிய பெண்களின் ‘சின் நா’ தற்காப்பு. 1000 பெண்கள் பங்கேற்பாளர்களைக் கொண்ட இந்த வரலாற்று நிகழ்வு சுய பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒழுக்கம் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும். இந்த சாதனைகள் புதிய உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு கிராண்ட் யுனிவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.*********
வி.வி. என்டர்டெயின்மென்ட் வாழ்நாள் சாதனையாளர் விருதை கல்வி மற்றும் சமூகசேவைக்கு தன்னலமற்ற பங்களிப்புக்காக அமெரிக்கன் கல்லூரி முதல்வர் டாக்டர். தவமணி கிறிஸ்டோபருக்கு திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் அவர்கள் விருது வழங்கினார். சமூக மேம்பாட்டிற்கு தங்கள் சேவையை வழங்கிய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு விளையாடும் பொழுது நவீன் என்னும் விளையாட்டு வீரர் மாடு முட்டியதில் உயிரிழந்தார். நவீனின் உயிரிழப்பு அவரின் குடும்பத்தை மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதித்தது. வி.வி என்டர்டைன்மென்ட் சார்பில் டாக்டர் தவமணி கிறிஸ்டோபர் மற்றும் மற்றும் இயக்குனர் கரு பழனியப்பன் ஆகியோர் நவீனின் குடும்பத்திற்கு உதவித்தொகையை வழங்கினர். திரைப்படத்துறை மற்றும் சமூகப் பணிகள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வானது உண்மையிலேயே ஒரு பிரமாண்டமான மற்றும் உணர்ச்சிகரமான நிகழ்வாக அமைந்தது. மாமதுரையர்கள், நடிகை பிந்து மற்றும் பிரபல தயாரிப்பாளர் மற்றும் சமூக சேவகர் திரு. குரு சாமி ஆகியோர் குறிப்பிடத்தக்க பங்கேற்பாளர்களாக இருந்தனர். ஜே.கே. முத்து மற்றும் நடிகர் ரிஷி ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன் அங்கமாக மதிப்பிற்குரிய டாக்டர் பிரியதர்ஷினி , கீர்த்தி பாண்டியன் மற்றும் ஹேமா சதீஷ் ஆகியோர் பங்கேற்று விழாவை சிறப்பித்ததுடன் இந்த விழா வெற்றி பெறுவதற்கான காரணமாகவும் அமைந்தார்கள். மேலும் ஹேமா தேவதாஸ், திருமதி ராஜ லக்ஷ்மி, மதுரை அண்ணாதுரை தீனதயாளன் மற்றும் செல்வம் ராமசாமி ஆகியோர் நிகழ்வின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு ஆற்றினர். கூடுதலாக, “தென்காசியின் குரல்” என்று அழைக்கப்படும் திருமதி காருண்யா மற்றும் உளவியல் நிபுணர் திருமதி ஆஷா ஆகியோரும் முக்கிய பங்கேற்பாளர்களாக இருந்தனர். வி.வி என்டர்டைன்மென்ட் , மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும் மாணவர்களின் கூட்டு முயற்சியின் மூலம் இந்நிகழ்ச்சி இனிதே வெற்றிகரமாக அமைந்தது.