கரோனா அலையின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் மிகவும் முன்கூட்டியே அவசர, அவசரமாக முழு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும், அதற்கான விலையை நாம் கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் உலக சுகாதார நிறுவனத்தின் அவசர சுகாதாரத் திட்டத்தின் தலைவர் மைக்கேல் ரியான் எச்சரித்துள்ளார். உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு முழுமையாக நீங்கவில்லை. இந்தியாவில் இரண்டாவது அலை முடிவுக்கு வரும் சூழலில், பல்வேறு நாடுகள் அடுத்தடுத்த அலைகளைச் சந்தித்து வருகின்றன. இதற்கிடையே பிரிட்டனில் ஊரடங்கில் ஜூலை 19-ம் தேதி முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளன. கரோனா பெருந்தொற்று இன்னும் ஓயவில்லை. ஆகையால், மக்கள் வைரஸுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார். *இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஃபேஸ்புக்கில் நேரலை கேள்வி – பதில் நிகழ்ச்சியில் உலக சுகாதார நிறுவனத்தின் அவசர சுகாதாரத் திட்டத்தின் தலைவர் மைக்கேல் ரியான் கலந்துகொண்டார். அதில் அவர் பேசும்போது, ”அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இன்னும் கரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. அமெரிக்க நாடுகளில் வாரந்தோறும் சுமார் 10 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் ஒரு வாரத்துக்கு 5 லட்சம் பேருக்காவது தொற்று உறுதி செய்யப்படுகிறது. வைரஸ் நம்மை விட்டுச் சென்றுவிட்டதாக எண்ணக் கூடாது. தொற்றுப் பரவல் இன்னும் முடியவில்லை. ஆனாலும், கரோனா அலையின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் மிகவும் முன்கூட்டியே அவசர, அவசரமாக முழு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. அதற்கான விலையை நாம் செலுத்த வேண்டியிருக்கும். இதே போக்கு தொடர்ந்தால், கரோனா வைரஸின் புதிய அலை வெகு விரைவில் ஏற்படலாம்” என்று மைக்கேல் ரியான் தெரிவித்துள்ளார். உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரஸான டெல்டா வைரஸின் பாதிப்பு உலகம் முழுவதும் கடுமையாக உள்ள சூழலில், மைக்கேல் ரியான் இவ்வாறு தெரிவித்துள்ளார். டெல்டா வைரஸ் மாதிரி சுமார் 100 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுவே உலகில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வைரஸாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது