யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பில், வான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பில், நடிகர்கள் ராதாரவி – சரண்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வருணன் – காட் ஆப் வாட்டர்” திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி நடைபெற்றது. ஜெயவேல் முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வருணன் – காட் ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தில் டத்தோ ராதாரவி, சரண்ராஜ் , துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரியல்லா, சங்கர் நாக் விஜயன், ஹரிப்பிரியா, மகேஸ்வரி, ஜீவா ரவி, அர்ஜுனா கீர்த்தி வாசன், ஹைடு கார்த்தி, பிரியதர்ஷன், கௌஷிக், துங்கன் மாரி, கிரண் மயி, பேபி ஜாயிஸ் , ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீ ராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பை யு. முத்தையன் கையாள, கலை இயக்கத்தை பத்து கவனித்திருக்கிறார். இந்த திரைப்படம் வரும் 14ம் தேதியன்று திரை அரங்குகளில் வெளியாகிறது.********
தயாரிப்பாளர் அன்புச்செழியன் பேசுகையில், ”வருணன் படத்தை பார்த்து விட்டேன். அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இன்றைய தேதியில் அனைவரது வீட்டிலும் வாட்டர் கேன் இருக்கும். அந்த தண்ணீர் கேனை வைத்து இயக்குநர் ஜெயவேல் முருகன் அற்புதமான படத்தை இயக்கியிருக்கிறார். ஜெயவேல் முருகன் எப்போதும் என் அலுவலகத்தில் இருப்பவர். இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியீட்டிற்கு அவருக்கு உதவ வேண்டும் என நினைத்தேன். இது ஒரு சின்ன படம். ரிலீஸ் செய்வது கடினம் என்பது தெரியும். அவருடைய உழைப்பு மற்றும் அவருடைய குழுவின் உழைப்பு வீணாகக் கூடாது என்பதற்காகவும், இந்த இளைஞர்களின் கனவு நனவாக வேண்டும் என்பதற்காகவும், வரும் வெள்ளிக்கிழமை இந்த திரைப்படம் வெளியாகிறது. வருணன் படக்குழுவில் உள்ள அனைவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நிறைய ஓடிடி தளங்கள் இருந்தாலும் சினிமா வியாபாரம் என்பது சுமார் தான். இதுபோன்ற கடினமான காலகட்டத்தில் ‘வருணன்’ படத்தை வெளியிடுகிறார்கள். இதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
இயக்குநர் ஜெயவேல் முருகன் பேசுகையில், ”இது போன்ற சின்ன பட்ஜெட் படங்களுக்கு என்னுடைய நண்பர்கள் உதவி இருக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களைத் தொடர்ந்து அன்பு சார் இவரை நான் காட் ஆப் சினிமா ( God of Cinema) என்றுதான் சொல்வேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் கே பி சார் ஸ்கூலில் இருந்து வந்தவன். அன்பு சார் யுனிவர்சிட்டி. அவருடைய ஆதரவு இல்லை என்றால் இந்த திரைப்படம் இவ்வளவு தூரம் வந்திருக்காது. இது கன்டென்ட் மூவி. தண்ணீரை பற்றிய ஒரு படம். வட சென்னை தான் கதைக்களம். ஆண்டவர் வாட்டர் சப்ளை என்ற பெயரில் மதுரையிலிருந்து இங்கு வந்து தண்ணீர் கேன் சப்ளை செய்பவராக ராதாரவி நடித்திருக்கிறார். ஜான் வாட்டர் சப்ளை என்று சென்னையிலே பிறந்து சென்னையில் வாட்டர் சப்ளை செய்பவர் சரண் ராஜ். இந்த இரண்டு பேருக்கு இடையே நடைபெறும் மோதல் தான் படத்தின் கதை. இந்தப் படத்தின் முன்னோட்டத்திற்கு பின்னணி குரல் கொடுத்த சத்யராஜிற்கு நன்றி. இந்தப் படத்தின் கதையை வருண பகவானின் கோணத்திலிருந்து சொல்லி இருக்கிறோம். யுவன் சங்கர் ராஜா, ஜி வி பிரகாஷ் குமார், சைந்தவி ஆகியோருக்கும் நன்றி. ஐம்பூதங்களை பற்றிய ஒரு கதை தான் இது. நாம் என்றைக்கு தண்ணீரை காசு கொடுத்து வாங்க ஆரம்பித்தோமோ அன்றிலிருந்து இந்த இயற்கையின் சாபம் நம்மை துரத்த ஆரம்பித்து விட்டது. அதுதான் இந்த படத்தின் டேக் லைன், ஒன் லைன். இதில் தண்ணீரைப் பற்றி நிறைய பேசியிருக்கிறோம். தண்ணீர் கேன் சென்னைக்கு 95ம் ஆண்டில் அறிமுகமானது. அதன் பிறகு அது மிகப்பெரிய வியாபாரம் ஆகிவிட்டது. நல்ல சுத்தமான தண்ணீர் எங்கும் கிடைக்கவில்லை. அதுதான் உண்மை. தண்ணீர் சேமிப்பு குறித்து எங்களால் முடிந்தவரை இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம். தண்ணீரால் வரும் பிரச்சனைகளை பற்றியும் சொல்லி இருக்கிறோம். எல்லோரும் எல்லா வேலையும் செய்கிறார்கள். நான் என்னுடைய நண்பனின் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களை தழுவித்தான் இப்படத்தின் கதையை எழுதி இருக்கிறேன். அனைவரும் இந்தத் திரைப்படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ஆதரவு தாருங்கள். நீரின்றி அமையாது உலகு,” என்றார்.