மனோன்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஆரூரான் தயாரித்து வந்த ” காவி ஆவி நடுவுல தேவி” முடிவடைந்துவிட்டது. இந்த நிறுவனம் மீண்டும் ஒரு நகைச்சுவை படத்தை தயாரிக்கிறது அதற்கு ” தேன் நிலவில் மனைவியை காணோம்” என்ற காமெடி தலைப்பை வைத்துள்ளனர்
தமிழ், தெலுங்கு உட்பட ஏனைய மொழிகளில் 250 படங்களில் தனது பங்களிப்பை கதாசிரியராக, வசனகர்த்தாவாக, திரைக்கதை ஆசிரியராக, தயாரிப்பாளராக, இயக்குனராக தனது உழைப்பை தந்துள்ள வி. சி.குகநாதன் இந்தப் படத்தின் கதையை இன்றைய இளைய சமுதாயம் விரும்பும் வகையில் எழுதிஉள்ளார். இதை கேள்விப்பட்ட பிரபல முன்னனி நகைச்சுவை நடிகரான யோகிபாபு நேரடியாக சென்று குகநாதனை சந்தித்து கதையை கேட்டதும் அதில் உள்ள மிக வித்தியாசமான கேரக்டரில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டது இந்தப் படத்தின் சிறப்பம்சமாகும். மேலும் இதில் மலையாள பட உலகில் முன்னணியில் உள்ள பிரபல நட்சத்திரம் கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் புதுமுகம் அமன், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, நான் கடவுள் ராஜேந்திரன், சிவசங்கர், ஆகியோருடன், பிரியங்கா, ரிஷா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
புகழ்மணி வசனத்தையும், சினேகன் மற்றும் ஹிருதயா இருவரும் பாடல்களையும் எழுத தேவா இசையமைக்கிறார். கணேசன் ஒளிப்பதிவையும், சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சியையும், பி.என்.சுவாமிநாதன் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கின்றனர். ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை நாடுகளில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. ஆருரான் தமது மனோன்ஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ” தேன் நிலவில் மனைவியை காணோம்” திரைப்படத்தை தயாரிக்கிறார்.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள திரைப்படக் கல்லூரியில் சினிமா பயிற்சி பெற்ற கயல் கதிர்காமர் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்..
மக்கள் தொடர்பாளர்கள்: விஜயமுரளி, கிளாமர் சத்யா