ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

ஜீ.ஸ்டுடியோஸ் – பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சிவ கார்த்திகேயன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். முன்னதாக நடைபெற்ற முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, முன்னணி நட்சத்திர இயக்குநர்களான வெற்றிமாறன்- சுதா கொங்காரா-  பா. ரஞ்சித் – அஸ்வத் மாரிமுத்து – ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கிங்ஸ்டன் ‘  திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி, அழகம்பெருமாள், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.******

உரையாடல்களை தீவிக் எழுத, படத்தொகுப்பு பணியை ஷான் லோகேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை எஸ் எஸ் மூர்த்தி வடிவமைக்க, அதிரடியான சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்திருக்கிறார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. தினேஷ் குணா கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கும் இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினருடன் தமிழ் திரையுலகத்தின் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இயக்குநர் கமல் பிரகாஷ் பேசுகையில், ” இந்த நாளுக்காக நான் எத்தனை நாள் கடுமையாக உழைத்திருக்கிறேன். ..கனவு கண்டிருக்கிறேன்.. என்பதை விட, இந்தப் படத்திற்கான எங்களுடைய உழைப்பு நிச்சயமாக திரையில் பேசும் என நம்புகிறேன். நான் மிகக் குறைந்த பட்ஜெட்டில் குறும்படங்களை இயக்குபவன். ஆனால் நமக்கு ஒரு ஐடியா தோன்றும். அந்த ஐடியாவிற்கு பட்ஜெட் கிடையாது. ஜீவி பிரகாஷ் சாரிடம் தொடர்ந்து ஆறாண்டுகள் பயணித்திருக்கிறேன் அந்தப் பயணத்தில் ஒரு நாள் இப்படத்தை பற்றிய ஐடியாவை அவரிடம் சொன்னேன். 20000 ரூபாயில் குறும்படம் இயக்கும் என்னை நம்பி கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் முதலீடு செய்து ‘கிங்ஸ்டன் ‘ திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் தயாரிப்பாளரான ஜீ வி பிரகாஷ் குமார். இதற்காக அவருக்கு முதலில் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய வலிமை ..அதன் உருவாக்கம் தான். இதற்காக தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பை வழங்கிய ஒளிப்பதிவாளர் -கலை இயக்குநர்- படத்தொகுப்பாளர் – சண்டை பயிற்சி இயக்குநர் – வி எஃப் எக்ஸ் குழு – ஆகிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த படத்தின் திரைக்கதையில் ஆக்சன் தனித்து இல்லாமல் திரைக்கதையுடன்  இணைந்தே இருக்கும். இதனால் சண்டை பயிற்சி இயக்குநர் திலிப் சுப்பராயனின் பங்களிப்பும் அதிகம். இதனால் திட்டமிட்ட நாட்களுக்குள் திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள் படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்தோம். இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் சேத்தன்- அழகம்பெருமாள்- குமரவேல்- ஆகியோர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.