“கிங்ஸ்டன்” திரைப்பட விமர்சனம்

ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கமல்பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், திவ்யபாரதி, சேத்தன், அழகம் பெருமாள், இ.குமாரவேல், சாபுமோன் அப்துசாமத், ஆண்டனி, ராஷேஷ் பாலச்சந்திரன், அருணாச்சலேஸ்வரன், பிரவீன், பயர் கார்த்திக் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கிங்ஸ்டன்”. தூத்துக்குடி அருகிலுள்ள ஒரு மீனவ குப்பத்தில் தனது தாத்தா குமாரவேலுடன் மீனவனாக வாழ்ந்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். மீன் பிடிக்க கடலுக்கு சென்றவர்கள் அனைவரும் பிணமாக கரை ஒதுங்குகிறார்கள். அதனால் மீன்பிடிக்க  கடலுக்கு யாரும் செல்வதில்லை. ஆனால் சிறுவயது முதலே சொந்தமாக ஒரு படகு வாங்கி கடலுக்கு சென்று  மீன்பிடிக்க வேண்டுமென்று ஜி.வி.பிரகாஷ் ஆசைப்படுகிறார். அதனால் பணம் சம்பாதிக்க சாபுமோன் அப்துசாமத்திடம் கடல் வேலைக்கு செல்கிறார். அவர் சென்ற் படகில் கடத்தல் பொருட்கள் இருப்பதால் நடுக்கடலில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்கிறார் ஜி.வி.பிரகாஷ். அதன் பிறகு அவர்களிடமிருந்து தப்பித்து வந்த சில நாட்களுக்குப் பிறகு தனது நண்பர்களுடன் பிணமாக திரும்பினாலும் பராவாயில்லை என்று துணிந்து மீன் பிடிக்க கடலுக்கு செல்கிறார். கடலுக்கு சென்ற ஜி.வி.பிரகாஷ் உயிருடன் திரும்பினாரா? மீன் பிடிக்க சென்றவர்கள் ஏன் பிண்மாக கரை ஒதுங்குகிறார்கள்? என்பதுதான் கதை. மீனவர் கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அவரின் ஒவ்வொரு காட்சியமைப்பும் உயிரோட்டமாக உள்ளது. இது அவரின் 25வது படம். காதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். படத்தின் முன்பகுதி மீனவர் படமாகவும் பின்பகுதி பேய் படமாகவும் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் கமல் பிரகாஷ். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு பின்புலத்தை அதிகளவில் காட்டி பார்வையாளர்களின் பொறுமை சோதிக்கப்பட்டிருக்கிறது. படத்தொகுப்பு பழிவாங்கினாலும் அதற்கு ஈடுகொடுத்து நிற்பது கடலில் நடக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் கைவண்ணம்தான். ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.