ஜீ5 நிறுவனம் அதன் அடுத்த ஒரிஜினல் சீரிஸான, ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸை, பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு பிரத்தியேகமாகச் சிறப்பு முன் திரையிடல் செய்தது. ஆன்மீகம், மர்மம், அறிவியல் கலந்து பரபரப்பான திரில்லராக உருவாகி இருக்கும் இந்த சீரிஸை, மர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா இயக்கியுள்ளார். அபிராமி மீடியா ஒர்க்ஸின் சார்பில் தயாரிப்பாளர்கள் அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன் தயாரித்துள்ளனர். இந்த அதிரடி திரில்லர் சீரிஸில் சாய் தன்ஷிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், இவருடன் சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய் ஜீ மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த முன் திரையிடல் நிகழ்வில் சீரிஸை பார்த்து ரசித்த பத்திரிக்கை விமர்சகர்கள், படக்குழுவினரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.**********
பின்னர் மொத்த படக்குழுவினரும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சீரிஸ் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
அபிராமி மீடியா ஒர்க்ஸின் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் கூறுகையில்…,மிக நீண்ட நாட்களாவிட்டது, இடையில் எங்கள் தயாரிப்பில் “விநோத சித்தம்” படத்தை உருவாக்கினோம், அது நல்ல வெற்றி. ZEE5 லிருந்து இது நல்ல கதை, தயாரியுங்கள் என்றனர், இந்த டீம் எனக்கு மிகவும் பிடிக்கும். இயக்குநர் நாகாவின் மர்மதேசம் தொடருக்குத் தீவிர ரசிகன் நான், ஒய் ஜி மகேந்திரன் என்னுடன் படித்தவர், நல்ல டீம், நாகா கதை சொன்னார், ஐந்தாம் வேதம் இருக்கிறதா? இல்லையா? எனத் தெரியாது, இந்த சீரிஸ் ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் பற்றிப் பேசுகிறது. ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் கொலையும் செய்யும், மனித உருவும் எடுக்கும், கடவுளை மீறி விடும், மிகப் பரபரப்பான திருப்பங்களுடன் நீங்கள் ரசிக்கும் வகையில் இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த சீரிஸ் 25 ஆம் தேதி வெளியாகிறது உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இயக்குநர் நாகா கூறுகையில் ஐந்தாம் வேதம் கதையைக் கடந்து 10 வருடமாகச் சிறிது சிறிதாக எழுதி வந்தேன், முழுமையாக முடிந்த பிறகு கௌஷிக்கிடம் தந்தேன், சிஜுவுக்கும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது, உடனே ஆரம்பிக்கலாம் என்றார். 7 மாதம் திரைக்கதை வேலை மட்டும் பார்த்தோம். பின்னர் தான் அபிராமி வந்தார்கள், எல்லாம் இனிமையாக நடந்தது. என்னோடு இந்த திரைக்கதையை மணிகண்டன் இணைந்து எழுதினார் அவருக்கு என் நன்றி. ஏஐ பற்றிய பயத்தை, நான் இந்த சீரிஸில் கொஞ்சம் பேசியிருக்கிறேன், இன்னும் 2 சீசன் இருக்கிறது, அதில் மனிதர்கள் வெற்றி பெறுகிறார்களா என்பது கதையாக இருக்கும், உங்கள் அனைவருக்கும் இந்த சீரிஸ் பிடித்திருக்குமென நம்புகிறேன் உங்கள் ஆதரவைத்தாருங்கள் அனைவருக்கும் நன்றி.